தென்னிந்தியாவில்தான் முதல் முறையாக இந்தியர்கள் உருவானார்கள். அதன் பின்னரே வட இந்தியாவில் மக்கள் குடியேறத் தொடங்கினர் என்று புதிய மரபியல் ரீதியிலான ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
இந்திய மூதாதையர்கள் குறித்த ஆய்வு ஒன்றை ஹைதராபாத்தில் உள்ள மூ்லக்கூறு மற்றும் மூலக்கூறு உயிரியல் ஆய்வு மையமும், அமெரிக்காவின் ஹார்வர்டு மருத்துவப் பள்ளி, ஹார்வர்ட் பொது சுகாதார கல்லூரி, ஹார்வர்ட் பிராட் கழகம், மாசசூசட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (எம்.ஐ.டி) ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.
இந்த ஆய்வு குறித்த மிகப் புதிய, அதேசமயம், பல வித்தியாசமான தகவல்களை இவர்கள் வெளியிட்டுள்ளனர். இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் இதழில் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஹைதராபாத் மையத்தின் முன்னாள் இயக்குநரும், இந்த ஆய்வறிக்கையின் இணை ஆசிரியருமான லால்ஜி சிங் மற்றும் ஹைதராபாத் மையத்தின் மூத்த விஞ்ஞானியான குமாரசாமி தங்கராஜனும் கூறுகையில், இது வரலாற்றை திருத்தி எழுத உதவும் ஆய்வாகும். 13 மாநிலங்களைச் சேர்ந்த 25 வித்தியாசமான இனக் குழுக்களைச் சேர்ந்த 132 பேரின் ஜீனோம்களிலிருந்து 5 லட்சம் மரபனு குறியீடுகளை ஆய்வு செய்தோம். அனைவருமே இந்தியாவின் பிரதான ஆறு மொழிகளைப் பேசும் இனக்குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
பழங்குடியினர், மேல் ஜாதி, கீழ் ஜாதி என அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய வகையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வுகளின்படி, இந்தியாவில், மிகவும் தொன்மையான 2 பிரிவினர் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்படுகிறது. இந்த தொன்மையான பிரிவினரை, தொன்மையான வட இந்திய மூதாதையர் என்றும் தொன்மையான தென்இந்திய மூதாதையர் என்றும் கூறலாம்.
தற்போது இந்தியாவில் உள்ள 4,635 மக்கள் இனங்கள் அனைத்தும் இந்த 2 தொன்மையான மூதாதையர்களிடம் இருந்து தனித்தனியாகவோ அல்லது இரண்டும் கலப்புற்றோ தோன்றி இருக்கலாம். வட இந்தியர்கள் ஐரோப்பியர்களுடன் ஒத்துப் போகிறார்கள்... இந்த இரு தொன்மையான இந்தியர்களில், தொன்மையான வட இந்தியர்கள் தற்போதைய மேற்கு ஆசிய மற்றும் ஐரோப்பிய மக்கள் இனத்தை மரபியல் ரீதியாக 40 முதல் 80 சதவீதம் வரை ஒத்து இருக்கிறார்கள். ஆனால் தொன்மையான தென் இந்தியர்கள் உலகில் எந்த இன மக்களோடும் மரபியல் ரீதியான தொடர்பு அற்றவர்களாக இருக்கிறார்கள். இதன் மூலம் தென் இந்தியர்கள்தான், தொன்மையான இந்தியாவின் முதல் குடிமக்கள் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
அதேபோல, அந்தமானில் வசிக்கும் மிகப் பழங்குடியினரான ஓன்கே' என்று அழைக்கப்படும் பிரிவினர் தொன்மையான வட இந்தியர்கள் மற்றும் தென் இந்தியர்களிடம் இருந்து தனித்து காணப்பட்டாலும், தொன்மையான தென் இந்தியர்களோடு சிறிது இணக்கமாக உள்ளனர் என்பது இவர்களுடைய ஆய்வின் முடிவு ஆகும். இதன் மூலம், தொன்மையான தென் இந்தியர்களும், அந்தமான் பழங்குடியின மக்களும் ஒரே மூதாதையரிடம் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து இருக்கக் கூடும் என்பதும் இந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்து.
அந்தமான் பழங்குடியினர்தான் முதன் முதலில் ஆதிமனிதன் தோன்றிய இடமான ஆப்பிரிக்க கண்டத்தில் இருந்து தெற்கு கடற்கரை வழியாக சுமார் 65 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வெளியேறிவர்கள். அதே காலகட்டத்தில்தான் தொன்மையான தென்னிந்தியர்களும் உருவாகியுள்ளனர்.
அதேபோல 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் வட இந்தியர்கள் உருவெடுக்க ஆரம்பித்துள்ளனர். பழங்காலத்தில் இருந்தே இந்தியாவில் ஒவ்வொரு மனித இனப்பிரிவினரும் அவரவர் இனத்துக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதாலும், தமக்கே உரிய கலாசார பழக்க வழங்கங்களை ஏற்படுத்திக் கொண்டதாலும், ஒவ்வொரு பிரிவினரும் மரபியல் மற்றும் கலாசார ரீதியாக தனித்தன்மை கொண்டு உள்ளனர். இதன் மூலம், பழங்காலத்தில் இருந்தே இந்திய மக்கள் இனம் தனித்தனி குழுக்களாக பிரிந்து கலப்பின்றி தனித்தன்மையுடன் வாழ்ந்து இருக்கிறார்கள் என்பது தெரிய வந்து உள்ளது. இந்த பிரிவினைதான் கலாசார பரிமாணங்களின் விளைவாக தற்காலத்தில் சாதி பாகுபாடாக உருவெடுத்துள்ளது.
பழங்காலத்தில் இருந்தே ஒவ்வொரு இனத்தினரும் தங்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொள்வதால் ஒவ்வொரு இனத்தவருக்கும் ஏற்படும் வெவ்வேறு மரபியல் மாற்றங்கள் அவரவர் சந்ததிகளின் வழியாக அந்தந்த இனத்தினரிடையே நிலைபெற்று, அதன் விளைவாக மரபியல் ரீதியிலான பல நோய்கள் வர வாய்ப்பு உள்ளது என்ற உண்மையையும் எடுத்துரைத்து இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 70 சதவீத இந்தியர்கள் மரபியல் ரீதியிலான நோய்களைக் கொண்டவர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பார்சி இனத்தவரிடையே மார்பகப் புற்றுநோய் அதிகம் உள்ளது. திருப்பதி, சித்தூர் பகுதிகளில் மோட்டார் நியூரான் நோய்கள் அதிகம் உள்ளன. மத்திய இந்தியாவில் ரத்த சோகை அதிகம் உள்ளது. வட கிழக்கிலும் இதே பிரச்சினை உள்ளது.
No comments:
Post a Comment