Search This Blog

Tuesday, August 18, 2015

சங்கம்

சங்கம்

சங்கம் வைத்து தமிழ வளர்த்தவர்கள் தமிழர்கள் என்று சொல்கிறார்களே அந்த சங்கம் சங்கம் என்றால் என்னவென்று எத்தனை பேருக்கு தெரியும்?


சங்க காலம் 

சங்க காலம் (Sangam period) என்பது பண்டைய தென்னிந்திய வரலாற்றில் நிலவிய தமிழகம் தொடர்பான ஒரு காலப்பகுதியாகும்.

தென்னிந்திய புராணங்களில் காணப்படும் கூற்றுகளின்படி, முற்காலத் தமிழகத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.

இக்காலப்பகுதி கிமு7500 லிருந்து கிபி 200 வரை நீடித்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. மதுரையை மையமாகக் கொண்டு தமிழ்ப்புலவர்கள் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தனர் என்ற காரணத்தால் இக்காலப்பகுதிக்கு இப்பெயர்

சூட்டப்பட்டுள்ளது.இம்முச்சங்கங்களில் மூன்றாவது சங்க காலமான கடைச்சங்கக் காலத்தையே வரலாற்றாசிரியர்கள் சங்ககாலமாக எடுத்துக் கொள்கின்றனர்.

முதல் இரண்டு சங்கங்களும் புராணங்களில் புகழ்பெற்று வாழ்பவை என்றே கருதுகின்றனர். .ஒவ்வொரு சங்கத்திலும் அச்சசங்க காலத்திற்கென சங்க இலக்கியங்கள் படைக்கப்பட்டு தோற்றம் கண்டுள்ளதாகக் கருதப்படுகிறது. கல்வெட்டுகள, சங்க இலக்கியங்கள், மற்றும் தொல்பொருள் தரவுகள் ஆகியவையே தென்னிந்தியாவின் ஆரம்ப கால வரலாற்று ஆதாரங்களாக திகழ்கின்றன.

புறச் சான்றுகள்.

தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும், திருக்குறளின் பரிமேலழகர் உரையிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. மெகஸ்தனிஸ் பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். சந்திரகுப்த மௌரியரின் மந்திரி கௌடில்யரும் பாண்டியர்களைக் குறிப்பிட்டுள்ளார். மகாபாரதமும், இராமாயணமும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றிக் குறிப்பிடுகிறது.

அசோகரின் குறிப்புகளும் தனது நாட்டின் தெற்கு எல்லையில் உள்ள அரசுகள் என்று சேர, சோழ, பாண்டிய நாடுகளைப் பற்றிக் கூறுகிறது. உரோமுக்கும் இந்தியாவிற்கும் இடையில் பெருகி வந்த வர்த்தகத்தைத் தாலமி குறிப்பிடுகிறார்.

சங்க காலத்தின் இறுதியில் மதுரையைக் கைப்பற்றிய களப்பிரர்கள் சங்க காலச் சிறப்புகள், தகவல்களை அழித்து விட்டதாகக் கூறப்படுகிறது.

"வரலாற்றின் உயிர்நாடி, காலக் கணிப்பாகும். இன்ன ஆண்டில், இன்ன திங்களில், இன்ன நாளில் இன்னது நிகழ்ந்தது என்று கூறுதல் வரலாற்றின் இலக்கணமாகும். பண்டையத் தமிழக வரலாற்றில் பல நிகழ்ச்சிகளுக்குக் காலங்கணித்தல் எளிதாகத் தோன்றவில்லை. மன்னர்களைத் தம் பாடல்களில் குறிப்பிடும் பழந்தமிழ்ப் புலவர்கள் அம்மன்னர்கள் வாழ்ந்திருந்த காலத்தைத் தெரிவிப்பதில்லை.

அவர்களுடைய செய்யுள்களில் விளக்கப்படும் சில நிகழ்ச்சிகளைக் காலங்கணிக்கப்பட்ட வேறு நிகழ்ச்சிகளுடன் தொடர்புறுத்தி அவற்றில் காலத்தை ஒருவாறு அறுதியிட வேண்டியதுள்ளது" என வரலாற்றுப் பேராசிரியர் கே.கே.பிள்ளை குறிப்பிடுகின்றார். எனவே, புறச்சான்றுகளைவிட, அகச்சான்றுகளையே அடிப்படையாகக் கொண்டு காலத்தை வரையறுக்க வேண்டியுள்ளது.

அகச்சான்றுகள் பெரும்பாலும் இலக்கியங்களாகவே உள்ளன. அவ்விலக்கியங்கள் தரும் சான்றுகளிலிருந்து தமிழகத்தின் வரலாற்றுக்கு உட்பட்ட காலம் சங்ககாலம் என்பது பெறப்படுகிறது. இக்காலம் தமிழ் இலக்கிய வரலாற்றில் பொற்காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் பாண்டியன், சோழன், சேரன் என்ற முப்பெரும் மன்னர் அரசாண்டு வந்தனர். பாண்டியரின் தலைநகரம் மதுரை; சோழர்களின் தலைநகரம் காவிரிப்பூம்பட்டினமும்(புகார்) உறையூரும் ஆகும். சேரனின் தலைநகரம் வஞ்சி.





சங்ககால மன்னர்கள் தமிழ்ப் புலவர்களைப் பாராட்டிப் பரிசில் வழங்கிப் புரந்து வந்தனர். சங்ககால மன்னர்கள் எழுப்பிய எழிலோங்கு அரண்மனைகள், மாளிகைகள், கோயில்கள், அங்காடிகள், துறைமுகங்கள், அவர்கள் ஓட்டிய நாவாய்கள் அனைத்தும் மறைந்துவிட்டன.

ஆனால் அவர்கள் காலத்துப் புலவர்கள் பாடிய பாடல்கள் - மன்னர்களது அருமைகளையும், பெருமைகளையும், பண்புகளையும் பறைசாற்றும் பாடல்கள் இப்போதும் எஞ்சி நிற்கின்றன. அந்தப் பாடல்களே சங்ககாலத் தமிழகத்தின் நாகரிகத்தையும், பண்பாட்டையும் உணர்த்துகின்றன. தமிழர்களின் அக, புற வாழ்வு ஒழுக்கங்கள், அரசியல், வீரம், வழிபாடு, விழாக்கள், ஆடல் பாடல்கள், வணிகம், ஓவியம் சிற்பம் கட்டடம் போன்ற கலைகள் ஆகிய எல்லாவற்றையும் சங்கப் பாடல்களே சான்றாக நின்று விளக்குகின்றன.

தலைச்சங்கம்

தலைச்சங்கம் (முதற்சங்கம்) (கி.மு 7000) ஆண்டளவில் குமரிக் கண்டத்திலிருந்த தென்மதுரையில் முதற் சங்கம் நடைபெற்று வந்தது. சிவபெருமான், அகத்தியனார், முருகக் கடவுள், முரஞ்சியூர் முடி நாகனார், குபேரன் முதலாய 549 புலவர் அதன்கண் அமர்ந்து தமிழ் வளர்த்தனர். அச்சங்கத்துடன் தொடர்பு கொண்டிருந்த புலவர்களின் எண்ணிக்கை 4449. அவர்கள் பரிபாடல்கள் பலவற்றையும், முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை என்ற நூல்களையும் இயற்றினார்கள். இந்தத் தலைச் சங்கம் தொடர்ந்து 4440 ஆண்டுகள் நடைபெற்றது.

காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாகப் பாண்டிய மன்னர் 89 பேர் இச்சங்கத்தைப் பாதுகாத்து வந்தார்கள். அகத்தியர் எழுதிய அகத்தியம் தலைச்சங்கத்தில் அரங்கேறியது என்பது பொதுவாக நிலவும் கருத்து.

தென்மதுரையில் பாண்டியர்களின் ஆட்சி நிலவியிருந்தது அங்கு 89 அரசர்கள் தென்குமரியை ஆண்டார்கள்.

இக்காலத்து நூற்கள்

முதுநாரை
முதுகுருகு
பரிபாடல்
அகத்தியம்



அழிவு

பஃறுளி ஆறும் பன்மலை அடுக்கும் முதற் கடற்கோளால் அழிவுற்றன. கடல் கோள் (கிமு 2387) நிகழ்ந்தது என்பர்.

இடைச்சங்கம்

பின்னர்த் தென்மதுரை கடல்கோளுக்குள்ளான போது, கபாடபுரம் பாண்டிய நாட்டுக்குத் தலைநகர மாயிற்று. அங்கு இடைச் சங்கம் நிறுவப்பட்டது. தொல்காப்பியர், இருந்தையூர்க் கடுங்கோழியார், மோசியார், வௌ¢ளூர்க் காப்பியனார், சிறுபாண்டரங்கனார், திரையன் மாறனார், துவரைக்கோன், கீரந்தையார் முதலிய 59 பேர் இச்சங்கத்தில் அமர்ந்து தமிழாராய்ந்தார்கள்.



அவர்களுடன் இச்சங்கத்தில் பாடிய புலவர்களின் எண்ணிக்கை 3700. வெண்டேர்ச் செழியன் முதலாக முடத்திருமாறன் ஈறாக 59 பாண்டிய மன்னர்கள் இச்சங்கத்தின் புரவலர்களாய்த் திகழ்ந்தனர். அவர்களுள் ஐவர் தாமே புலவர்களாகவும் அச்சங்கத்தில் அமர்ந்திருந்தனர். இச்சங்கம் 3700 ஆண்டுகள் நடைபெற்றது. இச்சங்கத்துக்கு அகத்தியமும், தொல்காப்பியமும் இலக்கண நூல்களாகத் திகழ்ந்தன.


கடைச்சங்கம்

கபாடபுரத்தைக் கடல் கொண்ட பின்னர்க் கடைச்சங்கம் வடமதுரையில் (இப்போதைய மதுரை) கூடிற்று. இச்சங்கத்தில் அமர்ந்து தமிழ் வளர்த்த புலவர்கள் 49-பேர். இவர்களுள் மூவர் பாண்டிய மன்னர். சேந்தம் பூதனார், அறிவுடையரனார், பெருங்குன்றூர்கிழார், இளந்திருமாறன், மதுரையாசிரியர் நல்லந்துவனார், மருதனிள நாகனார், கணக்காயனார் மகனார் நக்கீரனார் ஆகிய புலவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.






இவர்கள் உள்ளிட்ட 449பேர் பாடினர். இயற்றப்பட்ட நூல்கள் நெடுந்தொகை நானூறு, நற்றிணை நானூறு, குறுந்தொகை, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, கலிநூற்றைம்பது, பரிபாடல் எழுபது, கூத்து, வரி, சிற்றிசை, பேரிசை முதலியன. கடைச் சங்க காலத்தில் வழங்கிய இலக்கண நூல் தொல்காப்பியம். இச்சங்கம் 1850 ஆண்டுகள் நீடித்தது. இக்கடைச் சங்கத்தை மதுரையில் நிறுவியவன் பாண்டியன் முடத்திருமாறன் என்னும் மன்னன். இதன் இறுதி ஆண்டுகளில் அரசாண்டவன் பாண்டியன் உக்கிரப் பெருவழுதி. இவ்வாறு களவியல் உரை கூறுகிறது.

இலக்கியச் சான்றுகள்

முதன்மைக் கட்டுரைகள்: பண்டைய தமிழ் வரலாற்று மூலங்கள் மற்றும் சங்க இலக்கியம்
பழந்தமிழகத்தின் வரலாறு, தமிழர்களின் சமூக-அரசியல் சூழல் பண்பாட்டு வழக்கங்கள் தொடர்பான விரிவான தகவல்கள் உள்ளடங்கிய சொத்துக்களாக இலக்கியம் மற்றும் கல்வெட்டுகள் திகழ்கின்றன. வரலாற்றுக்கு முந்தைய காலம், தொன்மைக் காலம், இடைக்காலம் என்று மூன்று காலப் பிரிவுகளாகப் தமிழக வரலாறு பிரிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியத்தின் சமூக-அரசியல் மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் புரிதலை வழங்குகின்ற வகையில் உலகெங்கிலும் உள்ள இலக்கியங்களும், கல்வெட்டு ஆதாரங்களும் திகழ்கின்றன.

தமிழ் வரலாறை பலர் தெரிந்துகொள்ள இதை பகிருங்கள்.

தகவல்கள் தொடரும்...

No comments:

Post a Comment